வளரிளம் பருவம் : வெற்றிப் பருவம்


1.1 மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா ?

உலகமே வியக்கும் பாரதப் பெண்ணுக்கு, குறிப்பாக தமிழ்ப் பெண்ணுக்கு பண்பாட்டைப் பற்றி, வாழும் முறையைப் பற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டுமா ?

உண்மையில் தேவையில்லை !

1.2 இந்தியப் பெண்ணின் பாரம்பரிய சொத்து

நலமான வாழ்க்கை முறை, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை முறை, நிறைவான வாழ்க்கை முறை என்பது ஒவ்வொரு இந்தியப் பெண்மணியின் பாரம்பரிய சொத்து, சொல்லப்போனால், அவைகள் ஒவ்வொரு இந்தியப் பெண்ணின் இரத்தத்தில் ஊறியது. ஆனால் பாரதப் பெண், குறிப்பாக இன்றைய வளரிளம் பருவப் பெண்கள் மேலை நாட்டு நாகரீகம் மற்றும் மேலை நாட்டு கலாச்சார வாழ்க்கை முறைத் தாக்கத்தால், மனதளவில் தடுமாற்றத்தில் இருக்கிறார்கள்.

1.3 வளரிளம் பருவம் - முதல் தடுமாற்றம்:

வளரிளம் பருவப் பெண்ணின் முதல் தடுமாற்றம், நமது முன்னோர்கள் வாழ்ந்த இந்திய பாரம்பரிய முறைப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்வதா?

1.4 வளரிளம் பருவம் - இரண்டாவது தடுமாற்றம்

வளரிளம் பருவப் பெண்ணின் இரண்டாவது தடுமாற்றம், இந்தியப் பண்பாட்டின் கட்டுக்கோப்பான உள்நோக்கிய, ஆனந்தத்தைத் தேடும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதா ? அல்லது பணத்தை அடிப்படையாக கொண்ட மேலைநாட்டுப் பண்பாட்டின் படி, வெளிநோக்கிய பயண வாழ்க்கையை வாழ்வதா ?

1.5 வளரிளம் பருவம் - மூன்றாவது தடுமாற்றம்

வாழ்க்கை முறையறிந்து, அமைதியான வாழ்க்கையை இந்தியப் பண்பாட்டின் வழி நல்வழியில் வாழ்வதா ? அல்லது கண்டதே வாழ்க்கை, கொண்டதே கோலம் என்று ஆரம்பத்தில் இன்பம், பிறகு வாழ்நாள் முழுவதும் துன்பம் மற்றும் அமைதி இன்மை என்று மேலை நாட்டுப் பண்பாட்டின் வழி வாழ்வதா ?

1.6 சிந்தனை செய் மனமே:

வளரிளம் பருவப் பெண்களுக்கு தேவை இக்கணம், இந்தியப் பண்பாடு மற்றும் மேலை நாடுகளின் பண்பாடு என்ற இரண்டிலும் உள்ள நிறை மற்றும் குறைகளை நன்கு ஆராய்ந்து பார்க்கும் மனப்பக்குவம். மேலும், வளரிளம் பருவப் பெண்கள், இன்றைய செயலுக்கான எதிர்கால விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்த்து, தெளிவாக உணர்ந்து, தீர்க்கதரிசனமான முடிவை தொலை நோக்குப் பார்வையோடு எடுக்க வேண்டும். பிறகு, அந்த முடிவின் வழி, ஒரு வளரிளம் பருவப் பெண் தனது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

1.7 தேவையற்ற சிக்கல்:

வளரிளம் பருவத்தில் உள்ள பெண்கள் பல ஊடகங்கள் மூலம் வரும் தவறான செய்திகள் மற்றும் செவிவழியாக வரும் செய்திகளால் தடுமாற்றம் அடைகின்றனர். அவற்றின் விளைவு, வளரிளம் பருவத்தில் கேடு விளைவுக்கும் சில மற்றும் பல நடத்தைகளில் ஈடுபட்டு, உடல் நலப் பிரச்சனைகளில் மற்றும் மன நலப் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு அல்லல்படுகின்றனர்.

1.8 பிரச்சனைகளுக்கு காரணங்கள்

மெலும், வளரிளம் பெண்களின் உடலின் ஹார்மோன்களால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஒரு புறம், உடனிருக்கும் நண்பர்களின் வற்புறுத்தல்கள் மறுபுறம், இவை எல்லாவற்றையும் இளைய தலைமுறை கோணத்தில் பார்க்கத் தவறிய பெற்றோர்கள் மற்றும்
பெரியோர்களின் சொற்கள் முதலியனவும் வளரிளம் பருவப் பெண்களின் பிரச்சனைகளுக்கு காரணங்களாக விளங்குகின்றன.

1.9 வாழ்க்கைப் பாதையில் தடுமாற்றம்:

இவ்வாறு நாலாப்பக்கங்களில் இருந்தும் வெவ்வேறு செய்திகளை, வெவ்வேறு நேரங்களில், ஒன்றுக்கொன்று முரணான் கருத்துக்களைப் பெறும் வளரிளம் பருவ பெண்கள் வாழ்வில் எது சரி, எது தவறு, எப்படி நடந்து கொள்வது என்று புரியாமல் தடுமாறுகின்றனர்.

வளரிளம் பருவ பெண்ணே ! வாழ்க்கை.... வாழ்வதற்கே !
வாழ்க்கை....முரண்பாடு இல்லாமல் வாழ்வதற்கே ! !
வாழ்க்கை...இனிமையாக வாழ்வதற்கே !
வாழ்க்கை....தடுமாற்றம் இல்லாமல் வாழ்வதற்கே ! !

1.10 பருவ மாற்றம்....மாற்றம்

வளரிளம் பருவம் என்பது, ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குழந்தைப் பருவத்திற்க்கும், வயது வந்த பருவத்திற்க்கும் இடைப்பட்ட பருவமாகும். இந்த வளரிளம் பருவம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான பருவம். இந்த வளரிளம் பருவத்தில்தான் ஒரு பெண்ணிடம் உடலளவில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.

1.11 மனதளவில் பலப்பல மாற்றம்:

அதேபோல், இந்த வளரிளம் பருவத்தில்தான் ஒரு பெண்ணிடம் மனதளவில் பலப்பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான மாறுதல்கள் ஏற்படும் பருவம்தான் வளரிளம் பருவம். ஆகவே, இந்த வளரிளம் பருவத்தை எப்படி பயன் உள்ளதாக அமைத்துக் கொண்டு வாழ்வது என்பது ஒவ்வொரு வளரிளம் பருவப் பெண்ணின் கடமை.

1.12 பெண்ணின் வாழ்வில் விரைவான மாற்றம்:

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உடல் வளர்ச்சி, உணர்ச்சிகள், அறிவு, உறவு முறை, நன் மதிப்பு போன்றவற்றுக்கான விரைவான் மாற்றம் இந்த வளரிளம் பருவத்தில் தான் நிகழ்கிறது.

1.13 வளரிளம் பருவம் மிக முக்கியமான பருவம்:

இந்த வளரிளம் பருவம், ஒரு பெண்ணின் வாழ்க்கையை வளமாக அமைத்திட வழிவகுக்கும் அடித்தளப் பருவம். இந்த பருவத்தில் ஒரு பெண் தன்னைப் பற்றி தன்னுடைய திறமைகளைப் பற்றி, தன் வாழ்வின் நோக்கம் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு வாழ்க்கை வெற்றிப் பயணத்திற்கு ஆயத்தமாகும் மிக முக்கியமான பருவம் தான் வளரிளம் பருவம்.


1.16 வெற்றிச் சூட்சுமம்:

காவிரி ஆறு மலைப்பாங்கான கர்நாடக வனப் பகுதியில் உற்பத்தி ஆகிறது. ஆடுதாண்டு காவிரியாக இருந்த காவிரி, அகண்ட காவிரியாக திருச்சி மாவட்டத்தில் வந்து கல்லணையின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை செழிப்படைய செய்து, பூம்புகார் என்ற காவிரிப் பூம்பட்டிண்த்தில் வங்கககடலில் கலக்குகிறது.

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி ஆன காவிரி ஆறு நூற்றுக்கணக்கான மைல் பயணம் செய்வதற்க்கு காரணம், முறையாக காவிரி ஆற்றுக்கு இரண்டு கரைகள் உள்ளதுதான்.

அந்த காவிரி ஆற்றில், இரண்டு கரையில், ஒரு கரை உடைந்ததால், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்க்கு அந்த தண்ணீர் பயன் உள்ளதாக அமையுமா? காவிரி ஆற்றின் தண்ணீர் கடலை வந்து சேருமா?

வளரிளம் பெண்ணே! சற்று சிந்தி உடைந்த கரை வெள்ளக்காடாக ஒரு இடத்தையோ ஒரு ஊரையோ மாற்றி விடும்.

இதே போல், உன் வாழ்க்கையை ஒரு வரைமுறைக்குள் நல்லது கெட்டது எது என்று உணர்ந்து, அத்தகைய வரைமுறைக்குள் உன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், வாழ்க்கையில் பலப்பல அரிய சாதனைகள் படைக்கலாம்.

இதுவே வெற்றியாளர்களின் "வெற்றி சூட்சமம்". இதனை நீங்களும் இன்று முதல் பயன்படுத்தி வாழ்க்கையில் பலப்பல வெற்றிகள் அடைய வாழ்த்துக்கள்.மாணவ, மாணவிகளுக்கு பத்து அம்ச உறுதிமொழி:


1. நான் எனது வாழ்க்கையில் நல்லதொரு இலட்சியத்தை மேற்கொள்வேன்.

2. நன்றாக உழைத்து படித்து, என் வாழ்க்கை இலட்சியத்தை அடைய முற்படுவேன்.

3. நான் எனது விடுமுறை நாட்களில் எழுத படிக்கத் தெரியாத ஐந்து பேருக்கு எழுத படிக்கச் சொல்லிக் கொடுப்பேன்.

4. என் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்தபட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு, அதைப் பாதுகாத்து வளர்த்து மரமாக்குவேன்.

5. மது, சூதாடுதல் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகித் துயருறும் ஐந்து பேரையாவது அதிலிருந்து மீட்டு, நல்வழிப்படுத்த நான் முயல்வேன்.

6. துயருறும் ஐந்து பேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, அவர்களின் துயரைத் துடைப்பேன்.

7. நான் சாதியின் பெயரிலோ, மதத்தின் பெயரிலோ, இனத்தின் பெயரிலோ, மொழியின் பெயரிலோ எந்தவிதப் பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்து கொள்வேன்.

8. நான் வாழ்க்கையை நேர்மையாக நடந்து கொண்டு மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருக்க முயல்வேன்.

9. நான்,என் தாய், என் தாய் நாடு இரண்டையும் நேசித்துப் பெண் குலத்திற்க்குரிய மரியாதையும், கண்ணியத்தையும் அளிப்பேன்.

10. நான், நாட்டின் அறிவு தீபத்தை ஏற்றி அணையாத தீபமாகச் சுடர்விடச் செய்வேன்.


- ஏ. பி ஜே. அப்துல் கலாம்
முன்னாள் குடியரசுத் தலைவர்.